தமிழத்தில் 8 நாட்களாக நீடித்து வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 8 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், போராட்டம் நடத்திய நாட்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டது என்றும், வழக்குப்பதிவு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, போராட்ட காலத்திற்கு ஊதியம் வழங்குதல், வழக்குப்பதிவு உள்ளிட்ட விவகாரங்களில் பரிசீலனைக்கு பின்னர் முடிவெடுக்கப்படும் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நிலுவையில் இருக்கும் 0.13 காரணி ஊதிய உயர்வு குறித்து இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தரை நியமிக்க தயார் என நீதிபதிகள் கூறினர். பின்னர் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நடுவராக நியமித்து உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. 2.57 காரணி ஊதியம் தொடர்பாக மத்தியஸ்தர் முடிவெடுப்பார் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொழிற்சங்கத்தினர், மத்தியஸ்தர் நியமனத்தை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுபதாக அறிவித்தனர். மேலும் இன்று காலை முதல் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

