நாட்டின் 69வது குடியரசுத் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றுவதை தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. பின்னர் வீரதீர செயல்கள் புரிந்த வீரர்களுக்கு அசோக சக்ரா விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குகிறார். இந்த ஆண்டு முதன் முறையாக குடியரசுத் தின விழாவில் மியான்மர், இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், கம்போடியா, லாவோஸ், புருனே ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள், பங்கேற்க உள்ளனர். மேலும் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். முன்னதாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராணுவ வீரர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் குடியரசு தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், ஜனநாயகத்தின் தூண்கள் மக்கள்தான் என்றும் கூறினார். அன்னையைப் போல் அனைவருக்கும் உணவூட்டும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினார். மனிதநேயமும், கொடைப் பண்பும் இந்த நாட்டின் கலாச்சாரம் என்பதால், வசதி உள்ளவர்கள் தேவை உள்ளவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
குடியரசு தின விழாவையொட்டி மெரினா கடற்கரை சாலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடி ஏற்றுகிறார். இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதனை தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கும் பிற துறைகளை சேர்ந்தவர்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்குகிறார். இதனையொட்டி தமிழகம் முழுவது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர்கள் கொடியேற்றி குடியரசு தின விழாவை கொண்டாட உள்ளனர்.

