கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வு, நிலுவை தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 4 நாட்களாக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை எழும்பூரில் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய சிஐடியு மாநிலச் செயலாளர் சவுந்தரராஜன், வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலையிட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் தற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கி, விலைமதிப்பற்ற மனித உயிர்களுடன் அரசு விளையாடுவதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.
இதனிடையே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

