மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டையொட்டித் நீண்ட காலமாக சிறையில் இருப்பவர்களை விடுதலைச் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அளவில் உள்ள சிறைவாசிகளின் விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் தேசிய குற்ற ஆவண மையம் வெளியிட்டு வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளின் புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது இஸ்லாமியர்களும் தலித்துகளும் தான் அதிக அளவில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரிய வருவதாக அவர் கூறியுள்ளார். 2015ம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள தண்டனை சிறைவாசிகளில் 17 விழுக்காட்டினர் இஸ்லாமியர்கள் என்பது தெரியவந்துள்ளது என்றும் தொல்.திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாக சிறையில் இருப்பவர்களை புத்தாண்டிலும், தலைவர்களின் பிறந்த நாட்களின்போதும் நன்னடத்தையின் அடிப்படையில் தணடனைக் குறைப்பு செய்து விடுவித்து வந்தனர் என தெரிவித்துள்ள அவர், கடந்த 2006,2007 மற்றும் 2008 ம் ஆண்டுகளில் தி.மு.க ஆட்சியின்போது ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டதாகவும் தமது அறிக்கையில் கூறியுள்ளார். 2006 ஆம் ஆண்டு அரசாணை அடிப்படையில் 10 ஆண்டுகள் சிறையிலிருந்த 472 ஆயுள் சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனர் என்றும், 2007 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை அடிப்படையில் 5 பெண் கைதிகள் உட்பட 190 ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் 2008 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை அடிப்படையில் ஆயிரத்து 406 ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார். 2011 ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடைபெற்று அதிமுக அரசு பதவியேற்ற பின் தண்டனைக் குறைப்பு செய்து ஆயுள் சிறைவாசிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழக அரசு கைதிகளை விடுவிக்க முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது என்று தெரிவித்துள்ளார். ஒரு அரசின் பெருமை சட்டத்தைப் பயன்படுத்தி தண்டிப்பதில் மட்டும் இல்லை, அது கருணையை வெளிப்படுத்துவதிலும் அடங்கியுள்ளது. என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் இதர வழக்கில் உள்ள இஸ்லாமியர்களையும் இத்தருணத்தில் விடுதலைச் செய்ய வேண்டுமென முதலமைச்சரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த செயல் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமையும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
· சிறைவாசிகளின் விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் தேசிய குற்ற ஆவண மையம் வெளியிட்டு வருகிறது
· கடந்த சில ஆண்டுகளின் புள்ளி விவரங்களின்படி இஸ்லாமியர்களும், தலித்துகளும் தான் அதிக அளவில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
· 2015ம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள சிறைவாசிகளில் 17 விழுக்காட்டினர் இஸ்லாமியர்கள் என்பது தெரியவந்துள்ளது
· நீண்ட நாட்களாக சிறையில் இருப்பவர்கள் புத்தாண்டிலும், தலைவர்களின் பிறந்த நாட்களில் விடுவிக்கப்பட்டனர்
· கடந்த 2006,2007 மற்றும் 2008 ம் ஆண்டுகளில் தி.மு.க ஆட்சியின்போது ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை
· 2006ம் ஆண்டு 10 ஆண்டுகள் சிறையிலிருந்த 472 ஆயுள் சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனர்
· 2007ம் ஆண்டு அரசாணை அடிப்படையில் 5 பெண் கைதிகள் உட்பட 190 ஆயுள் சிறைவாசிகள் விடுதலை
· 2008ம் ஆண்டு ஆயிரத்து 406 ஆயுள் சிறைவாசிகள் விடுதலை
· 2011 ம் ஆண்டு அதிமுக அரசு பதவியேற்ற பின் தண்டனைக் குறைப்பு செய்து ஆயுள் சிறைவாசிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை
· எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழக அரசு கைதிகளை விடுவிக்க முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது
· 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் இதர வழக்கில் உள்ள இஸ்லாமியர்களையும் விடுதலைச் செய்ய வேண்டும்
· இந்த செயல் எம்.ஜி.ஆர்க்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமையும்.

