அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற சரக்கு, சேவை வரி கவுன்சில் கூட்டத்தில், 177 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. எனும் சரக்கு மற்றும் சேவை வரியானது, கடந்த ஜூலை 1ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஆனால், அவசரகதியில் நிறைவேற்றப்பட்ட வரிவிதிப்பு முறை, சிக்கலான வரிவசூல் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. பொதுமக்கள் மற்றும் வணிகர்களை இந்த ஜி.எஸ்.டி வரி பெரிதும் அதிருப்திக்குள்ளாக்கியது. இந்நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் 23-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு பொருட்களின் வரியைக் குறைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஜவுளி மற்றும் ஜவுளிப் பொருள்களுக்கான வரி, 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அழகுசாதனப் பொருட்கள், பற்பசை, ஷாம்பூ, சலவை சோப்பு, சுவிங்கம், சாக்லெட், கிரானைட் உள்ளிட்ட பொருட்களுக்கு தற்போது விதிக்கப்படும் 28 சதவீத ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது. டிராக்டர் மற்றும் அதன் உதிரி பாகங்கள், திரைப்படம் தயாரிப்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றிக்கும் வரி 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது. விளைபொருட்களை சேமித்து வைக்கும் சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகளுக்கான வரி 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. குழந்தைகள் மேம்பாட்டு சேவையின் கீழ் வழங்கும் சத்துமாவு 5 சதவிகித வரிவிதிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. செங்கல் தொழில் தொடர்பான சில்லரை வேலை மீதான சேவை வரி குறைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், சுமார் 50 பொருட்களை மட்டும் 28 சதவிகித வரியின் கீழ் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் வாஷிங்மெஷின், குளிர்சாதனப்பெட்டி, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்டவற்றிக்கு தற்போதுள்ள 28 சதவீத வரி தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

