முத்தலாக் தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
இஸ்லாமிய ஆண்கள் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை சட்டவிரோதம் என்று கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நடைமுறைக்கு மாற்றாக புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசை அறிவுறுத்தியது. அதன்படி கடந்த 28-ம் தேதி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா அவசர கதியில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் பல்வேறு குழப்பங்கள் இருப்பதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும் மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதால் கடும் எதிர்ப்புகளுக்கு நடுவே அன்றைய தினமே மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் முத்தலாக் நடைமுறையைப் பின்பற்றும் இஸ்லாமிய ஆண்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மாநிலங்களவையில் ஆளும் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்படலாம் என்று கூறப்படுகிறது.

