விதிமீறல் கட்டிடங்களும், மனிதத் தவறுகளுமே டெங்கு கொசு பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சேலத்தில் சுகாதாரமின்றி டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருப்பதாக கூறி, தனியாரின் இரண்டு மருத்துவமனைகளுக்கு 10 லட்சம் ரூபாய் மற்றும் 15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சம்மந்தப்பட்ட மருத்துவமனைகள் தொடர்ந்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. இருதரப்பு வாதங்களுக்குப் பின் மருத்துவமனைகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்து நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார். அதிகாரிகள் ஆய்வு நடத்தி குறைகள் இருந்தால் அதனை சுட்டிக்காட்ட வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, நோட்டீஸ் அனுப்பிய பிறகும் நிவர்த்தி செய்யாவிட்டால் மட்டுமே அபராதம் விதிக்கலாம் என்று கூறினார். கட்டிட விதிமீறல்களை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் மழை நீர் பூமிக்குள் இறங்க முடியாமல் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதாகவும், மனிதத் தவறுகளின் சங்கிலித் தொடர் பாதிப்புகள்தான் டெங்கு கொசு பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

