ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தவறான தகவலை அளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நவம்பர் 1 மொழிவழி தேசிய உரிமை நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பேராசிரியர் அருணன், மு.வீரபாண்டியன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஆழி. செந்தில் நாதன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் இக்கூட்டத்தில் எழுச்சியுரையாற்றிய தொல்.திருமாவளவன், மொழிவழி தேசியத்தை ஒழித்து விட்டு மதவழி தேசியத்தை இந்துத்துவா சக்திகள் திணிக்க பார்ப்பதாகவும், இந்தியா என்ற பெயரை இந்துஸ்தான் என மாற்ற மதவெறி அமைப்புகள் போராடிக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தவறான தகவலை அளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் பிரதமர் மோடிக்கு எதிராக கை அல்லது விரலை நீட்டினால், அதனை வெட்ட வேண்டும் என பாஜக எம்.பி நித்யானந்த் ராய் கூறியிருப்பது மதவெறி கும்பலின் அத்துமீறிய பேச்சை காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

