மின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, நிலுவைத்தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வும், நிலுவைத்தொகையும் இதுவரை வழங்கப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை மின்வாரியத் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்குழு, மின்வாரியத்தலைவர் மற்றும் மின்துறை அமைச்சர் ஆகியோரிடம் வழங்கிய பிறகும் ஊதிய உயர்வு தொடர்பான இறுதி முடிவை எடுக்க முடியாமல் மின்வாரிய நிர்வாகமும் தமிழக அரசும் திணறி வருவது வேதனையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வுக்கணக்கீட்டு காரணிகள் 2 புள்ளி 57 விழுக்காடு என மின்வாரியம் ஒப்புதல் அளித்த நிலையில் அதனை நிறைவேற்றுவதில் தமிழக அரசின் நிதித்துறை தயக்கம் காட்டுவதாக அவர் கூறியுள்ளார். தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களும் போக்குவரத்து ஊழியர்களைப்போல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் தமிழக மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுவார்கள் என்பதை தமிழக அரசு உணர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல், மின்வாரிய ஊழியர்களின் நியமான கோரிக்கைகளை ஏற்று , ஊதிய உயர்வும் நிலுவைத்தொகையும் உடனடியாக வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். வேலையில்லத்திண்டாட்டத்தை போக்கும் விதமாக மின்வாரியத்தில் உள்ள சுமார் நாற்பதாயிரம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
* மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 1.12.2015 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வும், நிலுவைத்தொகையும் இதுவரை வழங்கப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியது
* ஊதிய உயர்வு தொடர்பான இறுதி முடிவை எடுக்க முடியாமல் மின்வாரிய நிர்வாகமும், தமிழக அரசும் திணறி வருவது வேதனையளிக்கிறது
* 21.10.2017 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வுக்கணக்கீட்டு காரணிகள் 2.57% என மின்வாரியம் ஒப்புதல் அளித்த நிலையில் அதனை நிறைவேற்றுவதில் தமிழக அரசின் நிதித்துறை தயக்கம் காட்டுகிறது.
* மின்வாரிய ஊழியர்களும், போக்குவரத்து ஊழியர்களைப்போல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் தமிழக மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுவார்கள் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்
* தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல், மின்வாரிய ஊழியர்களின் நியமான கோரிக்கைகளை ஏற்று ஊதிய உயர்வும், நிலுவைத்தொகையும் உடனடியாக வழங்க வேண்டும்
* மின்வாரியத்தில் உள்ள சுமார் 40,000 காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்

