தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏறத்தாழ 2,40,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள நிலம் மற்றும் கடல் பகுதிகளில் முதல் கட்டமாக 24 கிணறுகளை அமைத்து ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான சர்வதேச ஒப்பந்தப் புள்ளியை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. இது விவசாயிகளின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் வரை சுற்றுச் சூழலை பாதிக்கும் இந்த திட்டத்தை எப்படியாவது கொண்டு வர வேண்டுமென்று மத்திய அரசு கங்கனம் கட்டிக்கொண்டு திரிகிறது.
இந்தியாவின் எரிபொருள் தேவையில் 80 முதல் 85 சதவீதம் வரை இறக்குமதியை சார்ந்துள்ளது. எனவே உள்நாட்டு எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்துடன் மரபு சார்ந்த கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி உற்பத்தி மட்டுமன்றி தற்போது அணு மின் நிலைய உற்பத்தியுடன் இன்னும் அபாயகரமாக கருதப்படும் மீத்தேன், ஷேல் காஸ், ஷேல் ஆயில் போன்றவற்றை எடுப்பதில் மத்திய அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வருவது சற்று அதிர்ச்சியாக உள்ளது.
மத்திய அரசின் 2013 காலகட்டத்தில் ‘நெல்ப்’ கொள்கையின்படி தனியார் நிறுவனங்களும் எண்ணெய், எரிவாயு போன்ற எரிபொருட்களை கண்டறிந்து எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையிலேயே ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற இந்திய தனியார் நிறுவனங்கள் நிலத்திலும், கடலிலும் எண்ணெய் உற்பத்தியில் தற்போது ஈடுபட்டு வருகின்றன. மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு 2022ம் ஆண்டுக்குள் உள்நாட்டு எரிபொருள் உற்பத்தியை ஓரளவு உயர்த்த வேண்டும் என்ற திட்டத்தோடு செயல்பட்டு வருகிறது. அதன்படி எரிசக்தி துறையில் தனியார் அதிகளவில் ஈடுபடும் வகையில் இந்தியா முழுவதும் 65 இடங்களில் சிறு மற்றும் நடுத்தர எண்ணை வயல்களை உருவாக்க கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரியில் ஏலம் விட்டது. அப்படிதான் நெடுவாசல், காவிரி டெல்டா உள்ளிட்ட இடங்களில் பல எண்ணெய் வயல்கள் தனியாருக்கு வழங்கப்பட்டது.
அதில் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. சுமார் 150 நாட்கள் நடந்த போராட்டம் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. போராட்டம் தீவிரமாக இருந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் நெடுவாசலுக்குச் சென்று போராட்டத்தில் கலந்து கொண்டன. ஆதரவும் தெரிவித்தன. இந்தநிலையில், மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தில் நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட எந்த இடத்திலும் மீத்தேன், கார்பன் காஸ் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
ஆனால், தற்போது “ஹெல்ப்’’ எனப்படும் ஒற்றை உரிமம் திட்டத்தில், இனி ஹைட்ரோ கார்பனை தனியாரே எடுத்துக்கொள்ள முடியும். இதற்கான திறந்தவெளி டெண்டர் விடப்பட்டு, ஏல நடைமுறை தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, காவிரி டெல்டாவில் ஆபத்தான நீரியல் விரிசல் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நெல்ப் முறையை மாற்றி, ஹெல்ப் என்ற ஒற்றை உரிமம் வழங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தை மேலும் எளிதாக்கி புதிய கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, எண்ணெய் வயல்களை மத்திய ஹைட்ரோ கார்பன் இயக்குநரகமே அடையாளம் கண்டு, அதை அரசு அல்லது தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடும் வழக்கமான முறையை மாற்றியுள்ளது. அதன்படி, தேவைப்படும் இடங்களை தனியார் நிறுவனங்களே தேர்ந்தெடுக்கவும் அரசு அனுமதி அளித்துள…

