தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்க எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தனியார் மருத்துவர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
மருத்துவக் கல்வியில் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக எனக் கூறி, இந்திய மருத்துவக் கவுன்சிலைக் கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 13ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார். இந்நிலையில் இந்திய மருத்துவர் சங்கத்தின் தமிழக கிளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசு கொண்டு வர உள்ள மசோதா மருத்துவ நிபுணர்களுக்குப் பதிலாக பிறதுறையைச் சேர்ந்தவர்களையும் அரசியல்வாதிகளையும் நியமிக்க வகை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மத்திய அரசிடம் மனு கொடுத்தும் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முடிவுக்கு எதிராக இன்று அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் அறிவிக்கப் பட்டுள்ளதாகவும், காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மருத்துவர்கள் பணிகளை புறக்கணிக்க இந்திய மருத்துவ சங்கத் தலைமை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன்படி அவசர சிகிச்சை, பிரசவம், மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சை ஆகியவற்றை தவிர மற்ற பணிகள் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய மருத்துவ கவுன்சில் மாநில தலைவர் ஜெயலால் மத்திய அரசின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

