மதுராந்தகம் ஏரி திறக்கப்பட வாய்ப்பிருப்பதால், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, 23.30 அடி கொள்ளளவைக் கொண்ட மதுராந்தகம் ஏரியில், தற்போது 21 அடிவரை நீர் நிரம்பி உள்ளது. முழு அளவை எட்டும் நிலையில் மதுராந்தகம் ஏரி திறக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு திறக்கப்பட்டால், கிளியாற்றின் கரையோரத்தில் உள்ள 21 கிராமங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதனால், முள்ளி, முன்னூத்தி குப்பம், வளர்பிறை, முருக்கசேரி, கத்திரிசேரி, விழுதமங்களம், வீராணக்குன்னம், தச்சூர் உள்ளிட்ட 21 கிராமங்களுக்கும் காஞ்சிபுர மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் மதுராந்தகம் ஏறி விரைவில் அதன் முழு அளவை எட்ட வாய்ப்புள்ளது. இதனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் மதுராந்தகம் ஏரியைக் கண்காணித்து வருகின்றனர்.

