வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னையில் நகரின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் கடந்த இரு தினங்களாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மழை தொடர்ந்து பெய்து வருவதால் 4-வது நாளாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மேலும் திருவள்ளூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல், இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

