திருச்சியில் பட்டப்பகலில் 1 கோடி ரூபாய் வழிப்பறி

திருச்சி தலைமை தபால் அலுவலகம் அருகே தனியார் நிதிநிறுவன ஊழியர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பாரீஸ் கார்னர் பகுதியில் ஏ.வி.எம். பைனான்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வரும் நிதிநிறுவனத்தில் சுந்தரேசன், மதியழகன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து, திருச்சியில் உள்ள கிளை அலுவலகத்துக்கு வழங்குவதற்காக ஒரு கோடி ரூபாய் பணத்துடன் ஆம்னி பேருந்தில் இவர்கள் திருச்சி சென்றுள்ளனர்.

திருச்சி தலைமை தபால் நிலையம் அருசூக இருவரும் ஆம்னி பேருந்தில் இருந்து இறங்கினர். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று, மதியழகன், சுந்தரேசன் ஆகியோரை தாக்கி, அவர்களிடமிருந்த ஒரு கோடி ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் திருச்சி கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் யார்?  ஊழியர்கள் பணம் கொண்டு வருவது அவர்களுக்கு எப்படி தெரிந்தது என்ற கோணத்திலும், பணம் கொண்டு வந்தவர்களிடமும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இதே நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு ஊழியரிடம் 95 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *