கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 4வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவின் குடும்பத்தினர், அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில், நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவிலான சோதனையை வருமான வரித்துறையினர் மேற்கொண்டுள்ளனர். சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல இடங்களிலும், ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களிலும் மொத்தம் 187 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. வருமான வரித்துறையினரின் இந்த அதிரடி சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோதனையில் 355 பேரின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள் குறித்து வருமான வரித்துறையினர் அறிக்கை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்துக்கு, வருமான வரித்துறை அனுப்பியுள்ள அந்த அறிக்கையில், இதுவரை எத்தனை கிலோ தங்கம், எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நடந்த சோதனையில், 15 கிலோ தங்கம் மற்றும் கணக்கில் வராத ஐந்தரை கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், போலி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களும், அதன் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துக்களின் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோடாநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 4வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

