டெல்லியில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 20பேரைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 20பேர் ஆட்சிமன்றச் செயலாளர்களாகப் பல்வேறு குழுக்களில் உறுப்பினராக இருந்தனர். இதனால் இவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சிமன்றச் செயலர்கள் என்கிற இரண்டு ஆதாயம் தரும் பதவிகளில் இருப்பதாகக் கூறி அவர்களைத் தகுதி நீக்கம் செய்யுமாறு, குடியரசுத் தலைவருக்குத் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருந்தது. ஆட்சிமன்றச் செயலர்களாக இருப்பவர்களை இவ்வாறு தகுதி நீக்கம் செய்வதில் இருந்து விலக்களிப்பதற்கான சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இந்தச் சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கக் குடியரசுத் தலைவர் மறுத்துவிட்டார். இந்நிலையில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 20பேரையும் தகுதி நீக்கம் செய்யும் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனிடையே தகுதி நீக்கத்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தொடுத்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

