முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 2வது நாளாக இன்றும் விசாரணை நடைபெறுகிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து விசாரிப்பதற்காக விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் கடந்த 22ம் தேதி வரை தபால் மற்றும் தொலைபேசி வாயிலாக தகவல்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆணையத்தில் இதுவரை 9 பிரமாணப் பத்திரங்கள், 70 தபால்கள் வந்துள்ளன. இந்நிலையில், நேற்று சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் ஆறுமுகசாமி விசாரணையை தொடங்கினார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்த திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு 2 அரசு மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2 அரசு மருத்துவர்கள் ஆஜராக உள்ள நிலையில், மருத்துவர் சரவணனை மீண்டும் இன்று விசாரணைக்கு ஆஜராக ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

