தமிழக அரசியலில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சென்னை ஆர்.கே.நகர் சட்டபேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து, காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு இன்று இடைதேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன் , சுயேட்சை வேட்பாளராக தினகரன் , நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலைக்கோட்டுதயம் , பாஜக சார்பில் கரு.நாகராஜன் உள்ளிட்ட மொத்தம் 59பேர் களத்தில் உள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 28ஆயிரத்து 234பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இந்தத் தொகுதியில் மொத்தம் 258வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள், மாற்று இயந்திரங்கள் என மொத்தம் 1178 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள், விவரங்கள் அடங்கிய சுவரொட்டி ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வெளியிலும் ஒட்டப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளுமே சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. அனைத்து வாக்குச்சாவடியிலும் துப்பாக்கி ஏந்திய துணைராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வாக்குப்பதிவை முன்னிட்டு மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனிடையே வாக்குப்பதிவின் போது குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
* வேட்பாளர்கள்:
திமுக – மருதுகணேஷ்
அதிமுக – மதுசூதனன்
சுயேட்சை – தினகரன்
நாம் தமிழர் கட்சி – கலைக்கோட்டுதயம்
மொத்தம் – 59 பேர் போட்டி
* வாக்காளர்கள் : 2 லட்சத்து 28ஆயிரத்து 234பேர்
* 258 வாக்குச்சாவடிகள் அமைப்பு
* 258 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 1178 வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளது
* வேட்பாளர்களின் விவரங்கள் அடங்கிய சுவரொட்டி ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வெளியிலும் ஒட்டப்பட்டுள்ளது.

