தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சட்டமன்றத்தில் எந்தெந்த பிரச்சனைகள் பற்றி கேள்விகள் எழுப்ப வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. முன்னதாக இன்று காலை 10 மணியளவில் திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இன்று காலை சென்னை சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

