சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் நேரில் ஆய்வு ; மழை நிவாரணப்பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு

சென்னையை புரட்டிப்போட்ட கனமழையால பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னையில் கடந்த மூன்று நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வடசென்னை பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார். பழைய வண்ணாரப்பேட்டை, ஆர்.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார். அப்போது, வெள்ள மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மழை வெள்ளத்தால் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர், அவர்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார். அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, உதயகுமார் உள்ளிட்டோர் முதலமைச்சருடன் உடன் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *