சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், பட்டாசு உற்பத்தி, விற்பனையை தடை செய்யக்கோரி, சில என்ஜிஓக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவால், தமிழ்நாட்டில் உள்ள பட்டாசு ஆலைகள் பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் இந்த மனுவால் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில், பீதியும், குழப்பமும் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளிக்கும், இதர மதம் சார்ந்த பண்டிகைகளுக்கும், வெடி வெடிப்பது என்பது தமிழக பாரம்பரிய நடைமுறைகளில் ஒன்று என்றும் மேம்படுத்தப்பட்ட வேதியியல் தொழில்நுட்பத்தினை அடிப்படையாக கொண்டு, குறைவாக மாசுவை ஏற்படுத்தும் தரமான பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல்வேறு நாடுகளில் அதிக மாசுவை உண்டாக்கும் குளோரைடு உப்புகளை பயன்படுத்தும் நிலையில், தமிழ்நாட்டில் மிக மிக குறைவான மாசு ஏற்படும் நைட்ரேட் உப்புகளே பயன்படுத்தப்படுவதாக அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
பட்டாசு தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுமேயானால், 850 பட்டாசு ஆலைகளின் உற்பத்தி முற்றிலும் முடங்கி, அதனை சார்ந்துள்ள 8 லட்சம் பேர் வறுமையால் வாடும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என தமது கடித்தத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனையடுத்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்கும் வகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

