குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில், ராஜ்காட், போர்பந்தர், நர்மதா, சூரத், ஜாம்நகர், கட்ச் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், ஆம்ஆத்மி சுயேட்சைகள் என 977 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2 கோடியே 12 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். காலை 8மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. மீதமுள்ள 93 தொகுதிகளில் வரும் 14ம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் 18ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

