ஒரே நேரத்தில் மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதா’ மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வைப்பதற்கான மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சட்ட அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். முஸ்லிம்கள் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 22ல் தீர்ப்பு வழங்கியது. மேலும் முத்தலாக்கை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் எனவும் பரிந்துரைத்தது. இதையடுத்து அதற்கான சட்டம் கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டது. இதில் சட்டத்துக்கு புறம்பான முறையில் மூன்றுமுறை தொடர்ந்து தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும் என்ற சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் முத்தலாக் சட்டத்திற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், முத்தலாக் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ‘முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதா’ மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக, உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய இஸ்லாமிய பெண்கள் சட்ட வாரியத்தின் தலைவர் ஷைஸ்தா, இந்த அரிய முயற்சிக்கு துணையாக இருந்த உச்சநீதிமன்றத்திற்கும் இந்திய சட்ட வாரியத்துக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார்.

