நிதிநிலை அறிக்கை தமிழகத்தையும், இந்தியா முழுவதும் உள்ள தலித் மக்களையும் ஒரு சேர வஞ்சித்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மோடி அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை தமிழகத்தையும் இந்தியா முழுவதும் உள்ள தலித் மக்களையும் ஒரு சேர வஞ்சித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது வளர்ச்சிக்கு வழிகோலுவதற்கு மாறாக வீழ்ச்சிக்கு அடையாளமாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுவரை இருந்த மரபை மீறி இந்தி மொழியில் பட்ஜெட் உரையாற்றியதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தொல்.திருமாவளவன் எச்சரித்துள்ளார். மோடி அரசு கடைசியாகத் தாக்கல் செய்யும் முழுமையான பட்ஜெட் இது என்பதால் தேர்தலை மனதில் வைத்து பல்வேறு நலத்திட்டங்களுக்கான அறிவிப்பு இதில் இடம்பெறுமென எதிர்பார்க்கப்பட்டதாகவும், ஆனால் அது ஏமாற்றமாகவே முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கர்நாடாகாவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து பெங்களூர் புறநகர் ரயில் திட்டத்துக்கு 17,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ள மோடி அரசு, தமிழ்நாட்டுகென எந்த திட்டத்தையும் அறிவிக்காதது கண்டனத்துக்குரியது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். தற்போது விதிக்கப்பட்டுவரும் கூடுதல் வரி மூன்று விழுக்காட்டிலிருந்து நான்கு விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஏழை எளிய மக்களின் மீது வரியை அதிகரித்துள்ள மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியைக் குறைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். தலித் மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்காக பட்டியல் இனத்தோர் துணைத் திட்ட விதிகளின் படி சுமார் ஒரு இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மோடி அரசோ 56,600 கோடி மட்டும் ஒதுக்கீடு செய்துள்ளதை அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய சுமார் இரண்டரை இலட்சம் கோடி ரூபாயை ஒதுக்காமல் மோடி அரசு துரோகம் இழைத்துள்ளதாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் மொத்தத்தில் இந்த பட்ஜெட் தலித் விரோத, தமிழர் விரோத பட்ஜெட் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
• நிதிநிலை அறிக்கை தமிழகத்தையும் இந்தியா முழுவதும் உள்ள தலித் மக்களையும் ஒரு சேர வஞ்சித்துள்ளது
• நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கு வழிகோலுவதற்கு மாறாக வீழ்ச்சிக்கு அடையாளமாக உள்ளது
• மரபை மீறி இந்தி மொழியில் பட்ஜெட் உரையாற்றியது கண்டிக்கத்தக்கது
• பல்வேறு நலத்திட்டங்களுக்கான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இடம்பெறுமென எதிர்பார்க்கப்பட்டது
• நிதிநிலை அறிக்கை ஏமாற்றமாகவே முடிந்துள்ளது
• மோடி அரசு, தமிழ்நாட்டுக்கு எந்த திட்டத்தையும் அறிவிக்காதது கண்டனத்துக்குரியது
• தற்போது விதிக்கப்பட்டுவரும் கூடுதல் வரி மூன்று விழுக்காட்டிலிருந்து நான்கு விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது
• ஏழை எளிய மக்களின் மீது வரியை அதிகரித்துள்ள மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியைக் குறைத்துள்ளது
• பட்டியல் இனத்தோர் துணைத் திட்ட விதிகளின் படி சுமார் ஒரு இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்
• மோடி அரசோ 56,600 கோடி மட்டும் ஒதுக்கீடு செய்துள்ளது
• தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய சுமார் இரண்டரை இலட்சம் கோடி ரூபாயை ஒதுக்காமல் மோடி அரசு துரோகம் இழைத்துள்ளது
• மொத்தத்தில் இந்த பட்ஜெட் தலித் விரோத, தமிழர் விரோத பட்ஜெட்

