சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலையொட்டி கடந்த 15 நாட்களாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வந்த அனல்பறக்கும் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்டோருக்கான வாகன அனுமதி முடிவடைந்துள்ளது. வெளியிலிருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சியினரும், தொகுதிக்கு தொடர்பில்லாதவர்களும் வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் நேற்று மாலை 5 மணி முதல் நாளை மாலை வரை ஆர்.கே. நகரில் மதுக்கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பரப்புரை நிறைவடைந்த நிலையில் ஆர்.கே.நகரில் இருந்து அரசியல் கட்சியினர் ஒரே நேரத்தில் வெளியேறியதால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனைதொடர்ந்து இன்று காலை துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் தொகுதியில் உள்ள 258 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட உள்ளது. மேலும் அங்கு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே வழக்கமாக ஒரு இடைத் தேர்தலுக்கு சுமார் 75 லட்சம் ரூபாய் மட்டுமே தேர்தல் ஆணையத்துக்கு செலவாகும் நிலையில் தற்போது வரை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு சுமார் 3 கோடி வரை செலவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வழக்கத்தைவிட அதிக அளவில் கண்காணிப்பு மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தாகும் என்ற வதந்திகளை நம்பவேண்டாம் என்று தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்காணி தெரிவித்துள்ளார்.

