நடிகர் ரஜினிகாந்த் இன்று தமது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பாரா என்று பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த மார்ச் மாதம் கன்னியாகுமரி, நெல்லை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் இறுதி நாளில் பேசிய அவர் போர் வரும் வரை காத்திருங்கள் என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் தமது ரசிகர்களை கடந்த 5 நாட்களாக சந்தித்து வருகிறார். இந்நிலையில் இன்று 6வது நாளாக ரசிகர்களுடனான சந்திப்பு நடைபெற உள்ளது. முன்னதாக முதல் நாள் சந்திப்பில் ரசிகர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து வரும் 31ந் தேதி அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார். அதன்படி ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து இன்று அறிவிப்பாரா என்று பொதுமக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

