இரட்டை இலை சின்னம் யாருக்கு ? என்பது தொடர்பான இறுதி விசாரணை, பத்து நாட்களுக்குப்பின் டெல்லி தேர்தல் ஆணையத்தில் இன்று மீண்டும் நடைபெறுகிறது.
கடந்த 6-ஆம் தேதி, டெல்லி தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணையில், வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் குற்றப்பின்னணி உடையவர்கள் எனவும், அவர்களுக்கு கட்சியில் மெஜாரிட்டி இல்லை எனவும் ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். தரப்பில் வாதாடப்பட்டது. இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை தாமதப்படுத்தவே, டிடிவி தரப்பில் காலஅவகாசம் கேட்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தினகரன் அணியினர், தங்கள் தரப்பு வாதத்தை வைக்க அவகாசம் கேட்டதை தொடர்ந்து, விசாரணையை அக்டோபர் 16-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்கிற வழக்கில், இன்று தேர்தல் ஆணையத்தில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியின் நிர்வாகிகள் டெல்லி சென்றுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, தொண்டர்களின் ஆதரவோடு உரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இரட்டை இலை தங்கள் அணிக்கே கிடைக்கும் என்று கே.பி.முனுசாமி நம்பிக்கை தெரிவித்தார். அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று சதிச் செயலில் ஈடுபடும் டிடிவி தினகரன் ஒரு மோசடி பேர்வழி என்று குற்றம்சாட்டிய அவர், டிடிவி தினகரன் குற்றச்சாட்டுக்களையெல்லாம் தாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த விசாரணையில் பங்கேற்பதற்காக, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கதமிழ்செல்வன், கலைச்செல்வன், மாரியப்பன்கென்னடி, பார்த்தீபன், ஏழுமலை, கதிர்காமு, ரத்தினசபாபதி ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். இதில், எம்.எல்.ஏ., ரத்தின சபாபதியை தவிர மற்றவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

