தென்கிழக்கு அரபிக்கடலில் அக்டோபர் 5-ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் வரும் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை மீனவர்கள் குமரிக்கடல், லட்சத்தீவுப் பகுதிகள், தெற்கு கேரள கடல் பகுதி, தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றவர்கள் அக்டோபர் 5க்குள் கரை திரும்ப அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கையை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவையில் பரவலாக மிதமழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ததாகத் தெரிவித்த அவர், அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம், புதுவையில் பரவலாக மிதமழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஓரிரு முறை லேசானது முதல் மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளதாகவ்ம் கூறினார்.

