சொகுசு, ஆடம்பரம் என்ற வகையில் வரக்கூடிய 28 பொருட்கள் மட்டுமே 28 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்பில் உள்ளதாகவும், மற்ற அனைத்துப் பொருட்களும் 18 சதவீத வரி வரம்புக்குள் வந்துவிட்டதாக அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். சிமெண்ட் மற்றும் ஆட்டோமொபைல் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படவில்லை.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, மானிட்டர்கள், டிவி, டயர்கள், லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கான சக்தி சேமிப்பான்கள் 28 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்பில் இருந்து 18 சதவீத வரி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான வாகன பாகங்கள் 5 சதவீத வரி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சிமெண்ட் மற்றும் ஆட்டோமொபைல் பொருட்களுக்கு வரி குறைக்கப்படவில்லை எனவும் அருண்ஜேட்லி தெரிவித்தார்.
சிக்கன வகுப்பு விமான டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாகவும், பிசினஸ் வகுப்பு விமான டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
100 ரூபாய்க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுகள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், 100 ரூபாய்க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுகள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக அருண்ஜேட்லி தெரிவித்தார்.
புதிய அறிவிப்புகளை தொடர்ந்து விமான டிக்கெட்டுகள், சினிமா டிக்கெட்டுகளுக்கான கட்டணம், டிவி, கம்ப்யூட்டர்களின் விலை குறைகிறது. இந்த ஜிஎஸ்டி வரிக்குறைப்பு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் நிதியமைச்சர் கூறினார்.
சொகுசு, ஆடம்பரம் என்ற வகையில் வரக்கூடிய 28 பொருட்கள் மட்டுமே 28 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்பில் உள்ளதாகவும், மற்ற அனைத்துப் பொருட்களும் 18 சதவீத வரி வரம்புக்குள் வந்துவிட்டதாகவும் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

