மும்பையில் பிரமாண்டமாக நடைபெற்ற, தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் திருமண நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி- ஆனந்த் பிரமால் திருமணம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்பானியின் ஆண்டில்லா பங்களா வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
திருமணத்திற்கு முன்பு நடந்த மகா ஆரத்தியில் நீதா அம்பானி உள்ளிட்டோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து, மணமகன் ஆனந்தை அம்பானியின் மகன் ஆகாஷ் குதிரையில் அழைத்து வந்தார்.
பாராத் (Bhaarath) நிகழ்ச்சியில் உறவினர்கள், தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர்களான அனில் அம்பானியும் முகேஷ் அம்பானியும் உறவினர்களை வரவேற்றனர். நடனங்கள், இசைநிகழ்ச்சிகள் என திருமண ஊர்வலம் களைகட்டியிருந்தது.
அதன்பின்னர் ஆண்டில்லா பங்களாவில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், முதலமைச்சர்களான சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், ஷாருக்கான், அமீர்கான் உள்ளிட்ட பிரபலங்கள் திருமணத்திற்கு வந்திருந்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதாவுடன் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார். நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷில்பா ஷெட்டி, அலியா பட் உள்ளிட்ட பலரும் அங்கு திரண்டிருந்தனர்.
நடிகை ஐஸ்வர்யா ராய், கணவர் அபிசேக் பச்சன் , மற்றும் மகள் ஆராதயாவுடன் வந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். புதுமணத் தம்பதியரான பிரியங்கா சோப்ரா-நிக் ஜோன்ஸ், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்-அஞ்சலி உள்பட ஏராளமான பிரமுகர்கள் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

