சீனா வணிக உடன்பாட்டுக்கு உதவினால் ஹுவேய் தலைமை நிதி அதிகாரி விவகாரத்தில் தலையிடுவேன் அதிபர் டிரம்ப் பேச்சு

சீனாவுடனான வணிக உடன்பாட்டுக்கு உதவியாக இருக்குமானால் ஹுவேய் தலைமை நிதி அதிகாரி விவகாரத்தில் தான் தலையிடப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அறிவுறுத்தலை அடுத்துச் சீனாவின் ஹுவேய் டெக்னாலஜீஸ் நிறுவனத் தலைமை நிதி அதிகாரி மெங்க் வான்சூ கனடாவில் டிசம்பர் முதல்நாள் கைது செய்யப்பட்டார். வான்கூவர் நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளுடன் அவரைப் பிணையில் விடுவித்துள்ளது.

மெங்க் வான்சூவை விசாரணைக்காக அமெரிக்காவுக்குக் கொண்டுவரக் கனடா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கையால் அமெரிக்கா – சீனா இடையிலான வணிக உறவுகள் மேலும் பாதிக்கப்படும் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில் வாஷிங்டனில் ராய்ட்டர்ஸ் செய்தியாளருக்குப் பேட்டியளித்த அதிபர் டிரம்ப், சீனாவுடனான வணிக உடன்பாட்டுக்கு உதவுமானால், ஹுவேய் தலைமை நிதி அதிகாரி மெங்க் வான்சூ விவகாரத்தில் அமெரிக்க நீதித்துறையில் தான் தலையிடப்போவதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *