அர்ஜெண்டினாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு, அர்ஜெண்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் நகரில் வரும் நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 1ஆம் தேதி நிறைவுபெறுகிறது. வேளாண்துறை சீர்திருத்தம், வர்த்தகம், சூழலியல் மாற்றம், சுகாதாரம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இன்று மாலை அர்ஜெண்டினாவுக்கு புறப்பட உள்ள நிலையில், மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகிய முக்கியத் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டின்போது, சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோரை சந்தித்து, இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து, பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக, வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரையும் சந்தித்து, முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யா மற்றும் சீன அதிபர்களையும் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

