மேகதாதில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கக் கர்நாடக அரசுக்கு அளித்துள்ள அனுமதியைத் திரும்பப் பெறக் கோரிப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமருக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், மேகதாதில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கக் கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்ததைக் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறு அறிக்கை அளித்தபோதே தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என வலியுறுத்தி செப்டம்பர் நான்காம் நாள் கடிதம் எழுதியதையும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அக்டோபர் எட்டாம் நாள் பிரதமருக்குக் கோரிக்கை மடல் அளித்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
மேகதாது அணை தொடர்பான சாத்தியக் கூறு அறிக்கையும், அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனத் தமிழக அரசு மத்திய அரசுக்கு ஏற்கெனவே தெரிவித்ததையும் குறிப்பிட்டுள்ளார். அணை கட்டும் திட்டம் கர்நாடகம் சொல்வதுபோல் குடிநீருக்கான திட்டம் மட்டும் அல்ல என்றும், அந்த மாநிலம் பாசனப் பரப்பை அதிகரித்துக் கொண்டே வருவது காவிரி நீர் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை மீறும் செயலாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் உண்மையான நியாயமான எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், மேகதாது அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செயல் தமிழகத்தில் காவிரி நீரை நம்பியிருக்கும் இலட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேகதாது அணை கட்ட விரிவான அறிக்கை தயாரிக்க அளித்துள்ள அனுமதியைத் திரும்பப் பெற மத்திய நீர்வள அமைச்சகத்தின் வழியாக மத்திய நீர்வள ஆணையத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கக் கர்நாடகத்துக்கு அளித்துள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

