மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்தின் 10ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில், மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2008ஆம் நவம்பர் 26ஆம் தேதி கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த 10 தீவிரவாதிகள், திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உள்பட மொத்தம் 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய 9 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அஜ்மல் கசாப் என்பவனை மட்டும் போலீசார் உயிருடன் பிடித்தனர். அவனுக்கு நீதிமன்ற உத்தரவின்பேரில், தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, மும்பையில் உள்ள நினைவிடத்தில், அம்மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் ஆகியோர் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர்.

