தஞ்சாவூர் மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஊர்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப் பரப்பில் பயிரிட்டிருந்த தென்னைகள் முழுவதும் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சுக்கிரம்பட்டி மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட ஊர்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் தென்னை பயிரிட்டிருந்தனர். காய்ப்புக்கு வந்து பயன்தந்துகொண்டிருந்த தென்னைகள் அனைத்தும் கடந்த 15ஆம் தேதி இரவில் வீசிய கஜா புயலால் சாய்ந்துவிட்டன. இதனால் ஏற்கெனவே கடன் வாங்கி விவசாயம் செய்து வந்த விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். சாய்ந்த தென்னைகளை அப்புறப்படுத்தவே அரசு வழங்கும் இழப்பீடு போதாது என்றும் கூடுதல் இழப்பீடு வழங்குவதுடன் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாய்ந்த தென்னைகளை அகற்றவே ஓராண்டு ஆகும் என்றும், அதற்குப் பிறகு புதிதாகத் தென்னம்பிள்ளை வைத்தால் பயன்தரக் குறைந்தது பன்னிரண்டு ஆண்டுகள் வரை ஆகும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
தென்னைகள் மட்டுமில்லாமல் வாழை, நெல் ஆகியனவும் சேதமடைந்ததால் விவசாயிகள் செய்வதறியாமல் திகைத்துள்ளனர். வீடுகளும் சேதமடைந்துள்ளதால் அவற்றிலிருந்து வெளியேறிப் பள்ளிக்கட்டடத்திலும் சேதமடையாத மற்ற வீடுகளிலும் பொதுமக்கள் தங்கியுள்ளனர். சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து மின்சாரம், குடிநீர் ஆகியவற்றை வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

