தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். தென் தமிழகத்திலும் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகியுள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் புழலில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனிடையே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நேற்று இரவு முதல் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
திருவள்ளூரில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர் மழையால் பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடின. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோன்று நெல்லை மாவட்டம் தென்காசியிலும், விருதுநகர் மாவட்டத்திலும் நேற்று பலத்த மழை பெய்துள்ளது.

