தமிழகத்தில் கண்மாய், குளங்களில் வணிக ரீதியாக மீன் வளர்க்க, ஏலம் விட, இடைகாலத் தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு எதிரான வழக்கில் ஏற்கனவே மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் புதன்கிழமை விசாரணையின் போது ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, வாலிநோக்கம், கடலாடி, போன்ற இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கண்மாய், குளங்களில் மீன் வளர்க்க ஏலம் எடுப்பவர்கள் மீன் பிடிப்பதற்காக குளத்து நீரை வீணாக வெளியேற்றி விடுவதாகவும் தொழில் போட்டியால் குளத்தில் விஷம் கலப்பு, நீர் மாசு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து கண்மாய், குளங்களில் மீன் வளர்க்கவும், ஏலம் விடவும் இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

