டிடிவி தினகரன் அதிமுக உறுப்பினர் இல்லை என்பதால், அதிமுகவில் சேர அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் சென்னை திரும்பும் வழியில், மதுரை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
திமுகவினர் மீதான ஊழல் வழக்குகளை மறைப்பதற்காக, தங்கள் மீது வழக்கு தொடருவோம் என கூறுவதாக முதலமைச்சர் கூறினார். ஜெயலலிதா இல்லாத காரணத்தினாலேயே, தங்களை பயமுறுத்தி, ஆளும் அதிமுக அரசு மீது களங்கத்தை ஏற்படுத்த, எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
காவிரி பாசனம் பெறும் மாநிலங்களுக்கு இடையே ஒத்த கருத்து இருந்தால் மட்டுமே, புதிய அணை கட்ட முடியும் என்றார்.. பட்டாசு வழக்கில், தமிழ்நாடு அரசின் மனுவின்படியே உச்சநீதிமன்றம் தற்போது அனுமதி வழங்கியிருப்பதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

