இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் எதிர்க்கட்சி தலைவர் ரா.சம்பந்தன் சந்திப்பு

இலங்கை அரசியலில் குழப்பம் நீடிக்கும் நிலையில் எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ரா.சம்பந்தனை பிரதமர் ராஜபக்சே சந்தித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் தலைவர் ரா.சம்பந்தனை ராஜபக்சே சந்தித்து பேசியுள்ளார். இலங்கை அரசியல் சூழலை குறித்து விரிவான விவாதம் நடந்ததாக தகவல்கள் கூறப்படுகிறது. மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களின் ஆதரவை பெறுவது தொடர்பாக ராஜபக்சே பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து ராபக்சேவுக்கு ஆதரவு அளிக்க ரா.சம்பந்தன் நிபந்தனை விதித்துள்ளார். அதில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையை அவர் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையே இலங்கை அரசியலில் நிலவி வரும் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவர உடனே நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் தெரிவித்துள்ளனர். எனவே சபாநாயகர், இன்று அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்து பேசி நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து முடிவெடுப்பார் என கூறப்படுகிறது. இலங்கை பிரதமராக ராஜபக்சே திடீரென நியமனம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த நியமனத்தை தாம் ஏற்கவில்லை என்றும் தானே பிரதமராக இருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்கே அறிவித்தார். இந்த நிலையில் நாடாளுமன்றம் நவம்பர் 16ம் தேதி வரை முடக்கப்பட்டுள்ளது.