நடிகை ஸ்ருதி ஹரிஹரனை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக பிரபல நடிகர் அர்ஜூன் மீது பெங்களூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிபுணன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அர்ஜூன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்திருந்தார். நெருக்கமான காட்சிகளின் போது தொடக் கூடாத இடங்களை நடிகர் அர்ஜூன் தொட்டதாகவும் ஸ்ருதி கூறியிருநதார்.
நடிகை ஸ்ருதியின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அர்ஜூன் அவருக்கு எதிராக பெங்களூர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடுத்தார். மேலும் நடிகை ஸ்ருதியிடம் 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டும் அர்ஜூன் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பெங்களூர் காவல் நிலையத்திற்கு சென்று நடிகர் அர்ஜூன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் நிபுணன் படப்பிடிப்பின் போது நடிகர் அர்ஜூன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறியுள்ளார்.
மேலும் 2015 டிசம்பர் மாதமும் படப்பிடிப்பின் போதும் நெருக்கமான காட்சிகளின் போது நடிகர் அர்ஜூன் தன்னிடம் வரம்பு மீறியதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து 2016ம் ஆண்டு ஜூலை மாதம் படப்பிடிப்பின் போது தன்னை பின்புறமாக வந்து கட்டிப்பிடித்து அறைக்கு தனியாக வருமாறு அர்ஜூன் வலியுறுத்தியதாகவும் ஸ்ருதி தனது புகாரில் கூறியுள்ளார். இதனை அடுத்து நடிகர் அர்ஜூன் மீது ஸ்ருதியை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது மற்றும் மானபங்கம் செய்வது ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

