டெல்லியில் காற்று மாசு அதிகரித்திருப்பதால் ஜாகிங் செல்வதைத் தவிர்க்கவும், கார் பயன்பாட்டைக் குறைக்கவும் அறிவுறுத்தல்

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்திருப்பதால், அங்கு ஜாகிங் செல்வதைத் தவிர்க்குமாறும், தனியார் கார் பயன்பாட்டைக் குறைக்குமாறும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லியில் நவம்பர் 1 முதல் 10ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் காற்று மாசு மேலும் மோசமடையும் என கருதப்படும் நிலையில், அதன் பாதிப்புகளை தவிர்க்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைகளை வழங்கியுள்ளது. நவம்பர் 1 முதல் 10ஆம் தேதி வரை, கட்டுமானப் பணிகள் மற்றும் நிலத்தை தோண்டும் பணிகளுக்கு தடை விதித்தல், அனல் மின்நிலையங்கள் தவிர்த்து நிலக்கரி அடிப்படையிலான மற்ற தொழிற்சாலைகளை நவம்பர் 4 முதல் 10ஆம் தேதி வரை மூடிவைத்திருத்தல், புகை உள்ளிட்டவற்றை வெளியேற்றுவதன் மூலம் வெளிப்படையாகவே மாசுபடுத்தும் வாகனங்களை இயக்காமல் தடுத்தல் போன்ற பரிந்துரைகளையும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியுள்ளது.

இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாடு மற்றும் மாசு தவிர்ப்பு ஆணையம், உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *