தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக கிழக்கு திசைக்காற்று வலுப்பெறும் என்றும், அந்த வகையில் கிழக்கு திசைக்காற்று தற்போது வலுப்பெறத் தொடங்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையானது மேலும் வலுப்பெற்று அடுத்த 5 நாட்களில் பருவமழை தொடங்குவதற்கான சூழலை ஏற்படுத்தும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 7சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

