விவி மினரல்ஸ் மற்றும் அந்நிறுவனத்தோடு தொடர்புடைய 100 இடங்களில், 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 2013ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட தடையை மீறி வைகுண்டராஜன் தாது மணல் ஏற்றுமதியில் ஈடுபட்டு வந்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், கடற்கரையோரம் உள்ள மணலில் தாதுக்களை பிரித்து எடுத்து ஏற்றுமதி செய்யும் தொழிலை, வைகுண்டராஜனுக்குச் சொந்தமான விவி மினரல்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு, செயல்பட்டு வரும் விவி மினரல்ஸ் நிறுவனத்தில், நேற்று காலை 6 மணிக்கு, வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.
வைகுண்டராஜன் வீடு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனம், திருவான்மியூர் அலுவலகம், எழும்பூரில் உள்ள விவி மினரல்ஸ் கார்ப்பரேட் அலுவலகம் உட்பட சென்னையில் மட்டும் 38 இடங்களில் சோதனை நேற்று தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 24 இடங்களிலும், தூத்துக்குடியில், 30 இடங்களிலும், கோயம்புத்தூரில் 2 இடங்களிலும், ஆந்திர பிரதேசத்தில் 4 இடங்களிலும், வருமானவரித்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், 100 இடங்களிலும் வருமான வரித் துறை சோதனை இன்று 2வது நாளாக நீடித்து வருகிறது.

