பிரபல திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பெண் எழுத்தாளர் லீனா மணிமேகலை பரபரப்பு புகார் கூறியுள்ளார். ஆனால் திரைப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பு தரவில்லை என்பதால் லீனா மணிமேகலை அபாண்டமான குற்றச்சாட்டை கூறுவதாக இயக்குனர் சுசிகணேசன் தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள லீனா மணிமேகலை, 2005ஆம் ஆண்டு சுசி கணேசனை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேட்டி எடுத்து முடித்தவுடன், தாம் வீட்டிற்கு புறப்பட்டதாகவும், அப்போது காரில் வந்த சுசி கணேசன், வடபழனியில் வீட்டருகே இறக்கி விடுவதாகக் கூறி தம்மை காரில் ஏற்றிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். சிறிது நேரம் பேசியபிறகு, திடீரென காரின் கதவுகளை செண்ட்ரல் லாக் செய்த சுசி கணேசன், தமது செல்போனை பிடிங்கி சுவிட்ச் ஆஃப் செய்து பின் இருக்கையில் வீசியதாக கூறியுள்ளார். பின்னர், தமது அடுக்குமாடி குடியிருப்புக்கு வருமாறு மிரட்டியதாக கூறியுள்ள லீனா மணிமேகலை, இயக்குநரிடம் ஆரம்பத்தில் தாம் கெஞ்சிப் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் காரின் கதவை உடைத்துவிடுவேன் என மிரட்டியதாகவும், ஒரு கட்டத்தில் அலறியதாகவும் தெரிவித்துள்ள லீனா மணிமேகலை, பிறகு தன்னிடம் இருந்த குறுங்கத்தியை காட்டி தப்பிச் சென்றதாக கூறியுள்ளார்.
இந்த பதிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இயக்குநர் சுசிகணேசன், அரை மணி நேரப் பேட்டிக்கு அறிமுகமான முதல் நாளிலேயே ஒருவர் காரில் ஏறச்சொன்னால், ஏறிக் கொள்ளும் புதுமைப் பெண் லீனா மணிமேகலை என விமர்சித்துள்ளார். மேலும், லீனா மணிமேகலை தம்மிடம் உதவி இயக்குநர் அல்லது பாடலாசிரியர் வாய்ப்பு கேட்டதாகவும், அதை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டதால், தம் மீது பொய் புகார் கூறியிருப்பதாகவும் சுசி கணேசன் விளக்கம் அளித்துள்ளார். அபாண்ட புகார் கூறியதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் லீனா மணிமேகலை மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்றும் சுசி கணேசன் எச்சரித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள லீனா மணிமேகலை, சுசிகணேசனின் மறுப்பே அவரை காட்டிக் கொடுப்பதாகவும், அவரிடம் வாய்ப்பு கேட்கும் தேவை தமக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

