சிலைக் கடத்தல் வழக்கில் தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சம்மன் அனுப்பப் பட்ட நிலையில் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கோரி அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
ரன்வீர்ஷாவின் சென்னை சைதாப்பேட்டை வீடு, காஞ்சிபுரம் மாவட்டம் மேல் மருவத்தூர் அருகிலும் படப்பை அருகிலும் உள்ள பண்ணை வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதில் 223 தொன்மையான சிலைகள், கோவில் தூண்கள் உள்ளிட்ட கலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சிலைக் கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர், சிலைகளை ரன்வீர்ஷாவுக்கு விற்றதாகத் தெரிவித்ததையடுத்து ரன்வீர்ஷா தொடபுடைய இடங்களில் சோதனை நடத்தியதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் ரன்வீர்ஷா சிலைகளை விலைக்கு மட்டும்தான் வாங்கினாரா, வெளிநாடுகளுக்கு கடத்தியதிலும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தவேண்டியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரன்வீர்ஷாவிடம் கைப்பற்றப்பட்ட சிலைகளில் கேரளா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த சிலைகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் வேறு எங்கெங்கு சிலைகளை வாங்கினார் என விசாரணை நடத்த வேண்டியிருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
மேலும் விலைக்கு வாங்கியிருந்தாலும் தொன்மையான சிலைகளை வைத்திருந்தது சட்ட விரோதம் என்ற அடிப்படையிலும் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக இன்று நேரில் ஆஜராக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் இன்று ஆஜரான அவரது வழக்கறிஞர், ரன்வீர்ஷாவின் தந்தை இறந்துவிட்டதாகவும், அது தொடர்பான சடங்குகளை செய்ய வேண்டியிருப்பதால் ஆஜராக வரும் 21-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்குமாறும் கோரினார். ஆனால் கால அவகாசம் தர விதிகளில் இடம் இல்லை என்று கோரி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் அதனை மறுத்துள்ளனர்.

