பணக்காரர்களின் பட்டியலில் தொடர்ந்து 11ஆண்டாக முகேஸ் அம்பானி முதலிடம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஸ் அம்பானி தொடர்ந்து 11ஆம் ஆண்டாக இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

2018ஆம் ஆண்டுக்கான இந்தியப் பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஸ் அம்பானி மூன்றரை இலட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு சேவை வெற்றியடைந்ததால் அவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட 68ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சொத்துமதிப்புடன் விப்ரோ தலைவர் அசீம் பிரேம்ஜி இரண்டாமிடத்தில் உள்ளார். ஆர்சலர் மிட்டல் தலைவர் லட்சுமி மிட்டல் ஒரு இலட்சத்து 34ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாமிடத்தில் உள்ளார். ஒரு இலட்சத்து 32ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள இந்துஜா சகோதரர்கள் நான்காமிடத்தில் உள்ளனர்.

பலோஞ்சி மிஸ்திரி ஒரு இலட்சத்து 15ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஐந்தாமிடத்தில் உள்ளார். எச்.சி.எல். தலைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சிவநாடார் ஒரு இலட்சத்து ஏழாயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஆறாமிடத்தில் உள்ளார். கோத்ரேஜ் குடும்பம், திலீப் சங்வி, குமார் பிர்லா, கவுதம் அடானி ஆகியோர் முறையே 7, 8, 9, 10ஆம் இடங்களில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *