10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கிணற்றில் வீசி படுகொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கிணற்றில் வீசி படுகொலை செய்த வழக்கில், குற்றவாளிகள் மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஓடப்பட்டி கிராமத்திற்கு உட்பட்டது காமாட்சிபுரம்… இங்கு வசித்து வந்த 10 வயது சிறுமி, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி காணாமல் போனார். இதையடுத்து, சிறுமியை நாலாபுறமும் தேடிய நிலையில், சிற்றூரில் அருகில் உள்ள கிணற்றில் இருந்து, அடுத்த மூன்றாம் நாளில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில், டிசம்பர் ஒன்றாம் தேதி, காமாட்சிபுரத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ், ரூபன் என்ற ரவி, குமரசேன் ஆகிய மூன்று பேரும் பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், மூன்று பேரும், 10 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கிணற்றில் வீசி படுகொலை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, மூன்று பேரும், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்து வந்த தேனி மகளிர் நீதிமன்ற நீதிபதி திலகம் இன்று தீர்ப்பளித்தார்.

அதில், 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கிணற்றில் வீசி படுகொலை செய்த குற்றவாளிகளான சுந்தர்ராஜ், ரூபன் என்ற ரவி, குமரசேன் ஆகிய மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை அளித்து தீர்ப்பளித்தார். மேலும், மூன்று பேருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *