வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு, 3 பேருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது

வேதியியலுக்கான நோபல் பரிசு பெண் விஞ்ஞானி உள்பட 3 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராயல் ஸ்வீடிஸ் அகாடமி ஆப் சயின்ஸ், வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு ஃபிரான்சஸ் ஹெச் அர்னால்டு,  ஜார்ஜ் பி.ஸ்மித் மற்றும் வி.வின்டர் ஆகிய 3 விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் விஞ்ஞானியான ஃபிரான்சஸ் ஹெச் அர்னால்டு, வேதியியல் செயல்பாட்டில் நொதிகளின் பரிணாமம் மற்றும் புரதங்களின் வினையூக்கம் குறித்து மேற்கொண்ட ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. என்சைம் எனப்படும் நொதிகள் மருந்துகள் மற்றும் உயிரி எரிபொருள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இவருக்கு பரிசுத்தொகையான ஆறரை கோடி ரூபாயில் 50 சதவீதம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்பட்டுள்ள மற்றொரு அமெரிக்க விஞ்ஞானியான ஸ்மித் பாக்டீரியாக்களை தாக்கும் வைரஸ்கள் மூலம் புதிய புரதங்கள் உருவாவதை கண்டறிந்துள்ளார். புதிய மருந்து உருவாக்கத்திற்கு இந்த நுட்பம் உதவிகரமாக உள்ளதால் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

பிரிட்டன் நாட்டை சேர்ந்த மற்றொரு விஞ்ஞானியான வின்டரும் இதே நுட்பத்தை பயன்படுத்தி மருந்து கண்டுபிடிக்க உதவியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் பரிசுத்தொகையில் தலா 25 சதவீதம் வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *