திருவாரூரில் துணிக்கடைக்கு பெற்றோருடன் சென்ற சிறுவன், கடையின் கல்லாப் பெட்டியில் இருந்து பணத்தை திருடிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருவாரூர் கடைவீதியில் பேபி கார்னர் என்ற சிறுவர்களுக்கான துணிக்கடை உள்ளது. கடந்த 1ஆம் தேதி மாலை கடைக்கு வந்த ஒரு தம்பதியினர் தங்கள் மகனுடன் வந்துள்ளனர். இருவரையும் கடையின் ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்ற பணியாளர் கவுசல்யா துணி வகைகளை எடுத்து மும்முரமாகக் காட்டிக் கொண்டிருந்தார். அப்போது தம்பதியினருடன் வந்திருந்த சிறுவன் கல்லாப்பொட்டியின் அருகே சென்று, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அதிலிருந்த பணத்தை திருடினான்.
பின்னர் மூவரும் துணி எதுவும் எடுக்காமல் சென்றுவிட்ட நிலையில், கல்லாவில் இருந்த பணம் காணாமல் போனதையறிந்த கடை உரிமையாளர் திருவாரூர் நகர போலிசில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலிசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

