மைக்ரோனேசியாவில் ரன்வேயைக் கடந்து கடலில் இறங்கிய விமானத்தில் அனைவரும் மீட்கப்பட்டதாக முதலில் சொல்லப்பட்ட நிலையில், மூழ்கிய விமானத்திலிருந்து ஒரு சடலம் கிடைத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மைக்ரோனேசியாவின் ஃபோன்பெய் நகரில் இருந்து பப்புவா நியூகினியாவின் போர்ட் மாரெஸ்பி நகருக்குப் புறப்பட்ட ஏர் நியுகினி விமானம் இடை நிறுத்தமான வினோ தீவில் தரையிறங்க முயன்றது. ஆனால், ரன்வேயைக் கடந்து 160 மீட்டர் தூரம் சென்று விமானம் கடலில் இறங்கியது.
இதையடுத்து 35 பயணிகளும் மீட்கப்பட்டு விட்டதாகவும், 9 பேர் மட்டுமே காயமடைந்ததாகவும் ஏர் நியுகினி தரப்பில் அறிவிக்கப்பட்டது. அவர்களில் 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விமானம் கடலில் மூழ்கிய நிலையில், நீர் மூழ்கி ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க வீரர்கள் ஒரு ஆணின் சடலத்தை அதிலிருந்து மீட்டுள்ளனர். இறந்தவர் யார் என கண்டறியும் பணி நடைபெறுகிறது. விபத்துக்கான காரணமும் விசாரிக்கப்பட்டு வருகிறது.



